சான்றோர்
முனைவர் த. முத்தமிழ்
உதவிப்பேராசிரியர்,
தமிழ்த்துறை
தியாகராசர் கல்லூரி
மதுரை
625 009
சான்றோர் என்ற சொல்லிற்குக் கல்வி கேள்விகளில் சிறந்தவர், அறிஞர், சால்புடையவர் போன்ற விளக்கங்கள் அமையப்பெறுவதுண்டு. ஆனால் சங்க இலக்கியங்களில் சான்றோர் என்ற சொல்லிற்கு வேறு வேறு பொருள்களும்
அமைகின்றன. அதனை இக்கட்டுரையின் வழி அறியலாம். மயிலை சீனி வேங்கடசாமி சான்றோன் என்ற சொல் சங்கப் புற இலக்கியங்களிலும் அற இலக்கியங்களில்
நாலடியார், திருக்குறளிலும் வில்லிபுத்தூரார் பாரதத்திலும் வீரன் என்பதைக்
குறிப்பதாக கூறுகிறார். சான்றோர் என்ற
சொல் அமைச்சன் என்ற பொருளிலும் அமைகிறது (புதிய பனுவல், பன்னாட்டுத் தமிழியல் ஆய்விதழ் இணையவழி ஆய்விதழ், காலாண்டிதழ், நவம்பர்2008, ப.85) இக்கட்டுரை சங்க அக இலக்கியங்கள் பத்துப்பாட்டு ஆகிய இலக்கியங்களில் சான்றோர் (சான்றாள், சான்றோன், சான்றோய்) என்ற சொல் உணர்த்தும் பொருளை ஆராய முற்படுகிறது.
தொல்காப்பியத்தில் சான்றோர்
தொல்காப்பியத்தில் சான்றோர் என்ற சொல் இரண்டு இடங்களில் அமையப்பெறுகின்றது.
“பகட்டினானும் ஆவினானும்
துகள்தபு சிறப்பின்
சான்றோர் பக்கமும்” (தொல். பொருள்.75)
பகட்டால் புரை தீர்ந்த வேளாளர் ஆவால் குற்றம் நீங்கிய வணிகர்
இவர்கள் குலத்தில் சிறப்பினையுடைய சான்றோர் ஆவர். அவர்கள் நம்மீது எந்தவொரு தீமையான எண்ணமும் எண்ணுதல் கூடாது. அவ்வாறு இருத்தலே ஒரு வகை வாகை(வெற்றி)யாகுமென வாகைத்துறை 18 னுள் கூறப்பட்டுள்ளது.
“அந்தணர் திறத்தும் சான்றோர் தேஎத்தும்
அந்தமில் சிறப்பின் பிறர்பிறர் திறத்தினும்” (தொல்.பொருள்.144)
கற்பு வாழ்வில் தலைவன் கூற்று அமையுமிடத்தில் பார்ப்பார்
கண்ணும் சான்றோர் கண்ணும் மிக்க சிறப்பினையுடைய பிறராகியவரிடத்தும் ஒழுகும் ஒழுக்கத்தைக்
குறிப்பினால் தலைவன் காட்டியவிடத்தும் தலைவன் தலைவியிடம் கூற்று நிகழ்த்துவான் என்கிறது இந்நூற்பா.
ஆக, தொல்காப்பியம்
சான்றோர் என்ற சொல்லிற்குத் தன்னிகரற்ற சிறப்பு குணங்கள் நிறைந்தவர் என்பதையே பொருளாக்க் கொள்கிறது.
அகராதிகளில் சான்றோர்
சான்றோர் என்ற சொல் நிறைவுடையவர், அறிவொழுக்கங்களால் சிறந்தவர், பேராளன், சூரியன், சங்க காலத்துப்புலவர், வீரர் போன்ற பொருளைக் குறிக்கிறது (தமிழ்ப் பேரகராதி பாகம்.3 பக்.1397).
“சால்“ என்ற அடிச்சொல் தொல்காப்பியத்தில் ஒரு இடத்தில் (தொல்.பொருள்.1010-12) மட்டும் அமைகிறது. அச்சொல் “நிறைந்த“ என்ற பொருளைத்
தருகிறது. (தொல்காப்பியச்
சிறப்பகராதி ப.149)
கலித்தொகையில் சான்றாள்
“சான்றாள்” என்ற சொல் ஒரு
இடத்தில் (கலித்தொகை) மட்டுமே அமைகிறது.
“இவள்தான், வருந்த நோய்
செய்திறப்பி னல்லால் மருந்தல்லள்
யார்க்கும் அணங்காதல் சான்றாளென்
றூர்ப்பெண்” (முல்லைக்கலி.109. 21-22)
ஆயமகள் ஒருத்தியின் அழகைத் தலைவன் வருணிப்பதாக அமைகிறது இப்பாடல். இவள்தான் பார்ப்பவர் வருந்த அவருக்குத் துன்பத்தைச் செய்து போவாளன்றி யார்க்கும்
மருந்தாக மாட்டாள். ஆடவர் எவருக்கும் இவள் அணங்கான வருத்தும் தெய்வமாக அமைவாள்
. இவளைக் கண்டு ஊர்ப்பெண்கள் அவள் சுமந்து வரும் மோர் வேண்டாம்
புளிப்பு மாங்காய் ஊறுகாய் வைத்துக்கொள்வோம். இந்த பக்கமே அவள் வரவேண்டாம் வந்தால் தத்தம் கணவர் அவள் அழகில் மயங்கிவிடுவர்
ஆதலால் வரவேண்டாம் என்பதாகவும் இவ்வளவு நோய் செய்யினும் அவள் மருந்தாகமாட்டாள் என்றும்
பாடல் அமைகிறது. (சான்றாள் – அழகால் வருத்தம் செய்பவள்)
கம்பராமாயணத்தில் சான்றாள்
கம்பராமாயணம் சுந்தரகாண்டம் திருவடி தொழுத படலத்தில் சான்றாள் என்ற சொல் சால்புடையவள் (சீதை) என்ற பொருளில் கையாளப்பட்டுள்ளது.
“உன் பெருந்தேவி என்னும் உ ரிமைக்கும் உன்னைப்பெற்ற
மன்பெருமருகி
என்னும் வாய்மைக்கும் மிதிலை மன்னன்
தன்பெருந்தனயை
என்னும் தகைமைக்கும், தலைமை சான்றாள்
என்பெருந்தெய்வம்! ஐயா! இன்னமும் கேட்டி
என்பான்” (6032)
சீதையைக் கண்ட அனுமன் இராமனிடம் ஐயனே, எனது சிறந்த தெய்வமாகிய பிராட்டி உனது சிறந்த மனைவி என்ற தகுதிக்கும் உன்னை
மகனாகப் பெற்ற அசரான தசரத சக்கரவர்த்தியின் சிறந்த மருமகள் என்னும் சிறப்புக்கும் மிதிலை
நகரத்து அரசனாகிய சனகனுடைய சிறந்த மகள் என்ற குணச்சிறப்புக்கும் தலைமை உள்ளதற்கு ஏற்பச்
சால்புடையவள் இன்னும் நான் சொல்வதைக் கேட்பாயாக என்று மேலும் கூறுவானானான் என்பது இப்பாடல் வெளிப்படுத்தும் கருத்து.
இங்கு சான்றாள் என்ற சொல் சால்புடையவள் என்ற பொருளில் சீதையைச் சிறப்பிக்குமிடத்து
அமைகிறது.
சங்க இலக்கியத்துள் சான்றோள் என்ற சொல் யாங்ஙனும் இடம்பெறவில்லை. மாறாக சான்றாள் என்ற சொல் மட்டுமே வருகிறது. அடுத்தபடியாக கம்பராமாயணத்தில் சான்றாள் என்ற சொல் இடம்பெறுகிறது. இவ்விரு இலக்கியத்திலும் இடம்பெறும் சான்றாள் என்ற சொல்லின் பொருள் முற்றிலும்
முரண்பட்டதாக அமைகிறது.
தமிழ்ப் பேரகராதியில் சான்றாள் என்ற சொல் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடதக்கது.
நற்றிணையில் சான்றோர், சான்றோன், சான்றோய்
நற்றிணையில் சான்றோர் என்பதற்குத் தலைவியைக் கைவிடாத
பண்புடையவன் என்றும் தாம் செய்யும் கடமையில் குறைவுபடாதவர் என்றும் தலைவனையேச் சான்றோன்
என்றும் தலைவிக்கு உதவி செய்பவர் (மேகம்- தலைவன் பொருட்டுத் தூதாக அமைவது) என்றும் மேலவர் செல்லும் நெறியில் சென்று வாழ்பவன் என்றும் இகழ்ச்சிக்குறிப்புத்
தோன்ற ஒன்றும் அறியாதவர்களைச் சான்றோன் என்றும் தம்மைச் சேர்ந்திருப்போர் படும் துன்பத்திற்கு
அஞ்சுவதே சான்றோர் மதிக்கும் செல்வம் என்றும் பொருள் அமைகிறது. சான்றோர் என்ற சொல்லிற்குப் பொருளுரைக்காமல் சான்றோருடைய பண்புகளை எடுத்தியம்பும்
வகையில் பெரும்பான்மையான பாடல்கள் அமையப்பெறுகின்றன.
“நெடிய மொழிதலுங் கடிய ஊர்ந்தலும்
செல்வம் அன்றுதன் செய்வினைப் பயனே
சான்றோர் செல்வம்
என்பது சேர்ந்தோர்” (நற்.210.5-7)
அரசராலே மாராயம் பெறப்படுதலும் அவர்முன்பாக விரைந்த செலவையுடைய குதிரை, தேர், யானை முதலாகியவற்றை ஏறிச் செலுத்துதலும் செல்வமெனப்படுவதன்று
அவையனைத்தும் முன்பு தாம்செய்த வினைப்பயனான் பெறப்படுகிறது.
சான்றாரால் செல்வம் எனப்படுவது யாதெனின் தம்மை அடைக்கலமாகக் கைப்பற்றியவர்க்கு
உண்டாகிய துன்பத்தைப் போக்கி அவரைக் கைவிடாமல் காப்பதுவே இனிய செல்வமாகுமென சான்றோர்
செல்வம் என்பதற்குத் தரும் விளக்கமே இங்கு கூறப்படுகிறது. சான்றோர் என்ற சொல்லிற்குப் பொருள் இல்லை. சான்றோர் என்பவரைத் தலைசிறந்தவராகக் கருதியுள்ளதையே இங்கு காணமுடிகிறது.
“மறுகுடன் திரிதருஞ் சிறுகுறு மாக்கள்
பெரிதுஞ் சான்றோர் மன்ற விசிபிணி
முழவுக்கண் புலரா விழவுடை ஆங்கண்” (நற்.220.4-6)
தோழி, தலைவன் மடலூர்தலைக்
கூறி யாம் பின்னே சென்றபோது என்னை நோக்கி இவ்வூரினர் அயலோர் என்றுரைப்பவர் சான்றோரே
என இகழ்ந்து கூறுகிறாள். ஆக இவ்விடத்தும்
சான்றோர் என்பவர் அனைத்தும் அறிந்தவரைக் குறிக்கும் சொல்லாகப் பயிலப்பட்டு வந்துள்ளது.
“நாருடை நெஞ்சத்து ஈரம் பொத்தி
ஆன்றோர் செல்நெறி வழாச்
சான்றோன் ஆதல்நன்கு அறிந்தனை தெரிமே” (நற்.233.7-9)
இப்பாடலில் சான்றோன் என னகர ஈறு பெற்று நேரடியாக ஆணொருவனைக் குறிப்பதாக இச்சொல்
அமைகிறது.
இதன்முன் பலநாளும் இங்கு வருதலால் (தலைவன் வரையாது நெடுங்காலம் வந்து ஒழுகுவதால்) யான் அறிந்த அளவில் அவன் தன் அன்புடைய உள்ளத்து அருள்பொருந்தி ஆராய்ந்து மேலவர்
செல்லும் நெறியிலே சென்று வாழாத சால்பிலன் ஆதலை நீ நன்றாக அறிந்தனையாகித் தேர்ந்து
கொள்வாய்.
தலைவன் சான்றோனல்லன் என்கிறாள் தோழி. வரைவு கால நீட்டித்தமையால் தலைவனைச் சான்றோனல்லன் என்று கூறுவது கோபத்தின் வெளிப்பாடே
தவிர அது உண்மையாகக் கூறுவதில்லை. ஆகையால் இவ்விடத்துத்
தலைவனே சான்றோனாக விளங்குகிறான்.
“பருவஞ் செய்த கருவி மாமழை
அவர்நிலை யறிமோ ஈங்கென வருதல்
சான்றோர்ப் புரைவதோ
அன்றே மான்றுடன்” (நற்.238.5-7)
அந்திமாலையில் யான் காமநோய் மிகக்கொள்ளுமாறு கார்ப்பருவுத்தைச் செய்த மின்னல்
முதலாகிய தொகுதியையுடைய கரியமேகமே, நீ அவர் (தலைவன்) நிலைமையை இங்கு நான் கூற அறிந்துகொள் என்று வருதல் சான்றோர்
செய்கையை ஒத்ததாகமாட்டாது.
தலைவியின் களவொழுக்கத்திற்கு உதவி செய்கின்ற மேகத்தைச் சான்றோர் என்கிறாள். ஆனால் களவிற்கு முழுவதும் உதவுகிற தோழியைச் (பெண்) சான்றோர் என புலவன் யாங்ஙனும் படைக்கவில்லை.
“நாடல் சான்றோர் நம்புதல் பழியெனில்
பாடிய கலுழுங் கண்ணொடு சாஅய்ச்
சாதலும் இனிதே காதலந் தோழி” (நற்.327.1-3)
நம்மை விரும்பிக் களவொழுக்கத்தில் வந்து முயங்குஞ் சான்றோராகிய தலைவரை நாம்
விரும்பி ஒழுகுதல் பழியுடையதாகும் எனில் நமக்குச் சாதலும் இனியதாகும்.
களவே சிறப்பெனத் தலைவனாகிய சான்றோர் கருதி வருவானாயினும் நாம் விரும்பி ஒழுகுவோம். அது பழியாயினும் சரியென தலைவனையேச் சான்றோனாகத் தலைவி கூறுகிறாள்.
அதே பாடலில், மீண்டும் சான்றோர் என்ற சொல் அமையப்பெறுகிறது.
“அந்நிலை அல்ல ஆயினுஞ் சான்றோர்
கடன்நிலை குன்றலும் இலரென்று உடனமர்ந்து
உலகங்கூறுவது உண்டென நிலைஇய” (நற்.327.4-6)
அவ்வாறு இறப்பதாயினும் சால்புடையவர் தாம் செய்யுங்கடமையிலே குறைபடார் என உலகம்
கூறுவதுண்டு. அதனால் அவன் மார்பிற்கு உரிமை உடையோம் என்பதே இனிமையெனக்
கருதுவோம்.
தலைவன் வரைந்து கொள்ளாவிடின் நான் இறப்பேன் என்றால் அது சான்றோனாகிய தலைவனுக்குப்
பழி என்றுரைப்பதன் வழி தலைவனைச் சான்றோனாகவேத் தலைவி கருதுவது புலனாகிறது.
“அருவி ஆர்க்கும் அயந்திகழ் சிலம்பின்
வான்தோய் மாமலை நாடனைச்
சான்றோய் அல்லை என்றனம் வரற்கே” (நற்.365.7-9)
மழைபெய்யாதொழிந்தாலும் அருவிகளில் நீர் நிரம்ப காணப்படும் ஊரில் உள்ள தலைவனே, உன்னையடைந்த எம்மை நீ கைவிடுதல் என்பது சான்றோர் செய்கையன்று.
இவ்விடத்தும் தலைவனையேச் சான்றோனாகப் படைக்கின்றனர். தலைவியைக் கைவிடுதல் என்பது சான்றோர் செய்கையன்று என்று கூறுவதன்வழி புலனாகிறது.
குறுந்தொகையில் சான்றோர்
குறுந்தொகையில் சான்றோர் என்ற சொல்லிற்கு நடுவுநிலைமை உடையவர், அறிவாலமைந்த பெரியோர், தலைவி நம்பிய
தலைவன் கைவிடாதவனாக இருப்பவன் (தலைவனையேச்
சான்றோனாக தலைவி எண்ணுதல்) என்ற பொருள்கள்
அமையப்பெறுகின்றன.
“வான்றோய் வற்றே காமம்
சான்றோ ரல்லர்யா
மரீஇ யோரே” (குறுந்.102.3-4)
வானத்தைத் தோய்வது போன்ற பெருக்கத்தையுடையது. எம்மால் மருவப்பட்டத் தலைவர் சால்புடையவரல்லர். தலைவனை நினைத்தால் உள்ளம் வேகிறது. நினையாமல் இருக்கவும் முடியவில்லை. காமநோயோ என்னை வருத்துகிறது.
இங்கும் தலைவனே சான்றோனாகப் படைக்கப்படுகிறான். விரும்பியப் பெண்ணைக் கைவிடாதவரைச் சான்றோர் எனக் கூறுதல் கருதத்தக்கது.
“துனியல் வாழி தோழி சான்றோர்
புகழு முன்னர் நாணுப
பழியாங் கொல்பவோ காணுங் காலே” (குறுந்.252.6-8)
வருத்தமுறாதே அறிவானமைந்த பெரியோர் தம்மைப் புகழும் முன்னரும் நாணுவர். அத்தகையோர் ஆராயுமிடத்துப் பழிச்சொல்லை யாம் கூற எங்ஙனம் பொறுப்பர்? (பரத்தையிடம் சென்று வந்த தலைவனை ஏன் ஏற்றுக்கொண்டாய் என்று தோழி வினவ தலைவி
மேற்கூறியவாறு பதிலுரைக்கிறாள்)
தலைவன் பரத்தையிடம் சென்று வந்திருப்பினும் அவன் சான்றோர். ஆதலால் நாம் பழிச்சொல்லைக் கூறின் எவ்வாறு பொறுப்பர் என்றுரைப்பதன்வழி இங்கும்
தலைவனேச் சான்றோராகின்றான் என்பது புலனாகிறது.
“காந்தளங் கொழுமுகை காவல் செல்லாது
வண்டுவாய் திறக்கும் பொழுதிற் பண்டும்
தாமறி செம்மைச் சான்றோர் கண்ட
கடனறி மாக்கள் போல” (குறுந்.265.1-4)
அரும்பை மலரும்வரை விடாமல் வண்டுகள் மொய்ப்பது போல நடுவுநிலைமையை உடைய
சான்றோரைக் கண்ட மனிதரைப் போல தலைவனிடம் உனது நிலையை உரைத்தேன் உன்னை விரைவில் வரைய
வருவான்.
இங்கு சான்றோர் என்ற சொல் நடுவுநிலைமை உடையவர் என்ற பொருளில் கையாளப்படுகிறது. இப்பாடலில் உவமைக்காக சான்றோர் என்ற சொல் அமைகிறது.
அகநானூற்றில் சான்றோர்
அகநானூற்றில் சான்றோர் என்ற சொல்லிற்குப் பழியுடன் கூடிவரும்
இன்பத்தினை விரும்பாதவர், பெரியோர் என்ற
இரண்டு பொருள்கள் அமைகின்றன.
“இன்னா இன்னுரை கேட்ட சான்றோர்
அரும்பெறல் உலகத் தவனொடு செலீஇயர்” (அக.55.13-14)
பெருஞ்சேரலாதன் வடக்கிருத்தலின் போது இன்னாமையும் இனிமையும் உடைய உரையினைக்
கேட்ட பெரியோர்.
இங்கு சான்றோர் என்ற சொல் பெரியோர் என்ற பொருளில் கையாளப்படுகிறது.
“கழியக் காதலர் ஆயினும் சான்றோர்
பழியொடு வரூஉம் இன்பம் வெஃகார்” (அக.112.11-12)
சான்றோராவார் மிக்க காதல் கொண்டார் ஆயிடினும் பழியுடன் கூடி வரும் இன்பத்தினை
விரும்பார். ஆதலால் நீ விரைவில் வரைந்துகொள்க எனத் தோழி தலைவனிடம் கூறுவதாகப்
பாடல் அமைகிறது.
இங்கும் தலைவனைக் குறிக்கவே சான்றோர் என்ற சொல் பயன்படுகிறது.
பத்துப்பாட்டு - மதுரைக்காஞ்சியில் சான்றோர்
மதுரைக்காஞ்சியில் சான்றோர் என்ற சொல் மெய்யுணர்வாளர் என்ற
பொருளைக் குறிக்கிறது.
“நிலந்தரு திருவின் நெடியோன் போல
வியப்புஞ் சால்புஞ் செம்மை சான்றோர்” (மது.764-765)
நிலந்தரு திருவின் பாண்டியன் என்னும் புகழால் நீண்ட மன்னனைப் போல மெய்யுணர்ச்சி காரணமாகத் தம்முட் தோன்றும் இன்பத்தின்கண்
இறும்பூதும். அது தானாகிய நிறைவும் அந்நிலை மாறாமைக்குரிய செப்பமுடைமையும்
நிறைந்த மெய்யுணர்வாளர். பலரிடத்தும்
உளதாகிய அழுக்கற்ற செம்பொருள் உணர்வோடே காணப்பெற்று வாழ்வர்.
பத்துப்பாட்டு - குறிஞ்சிப்பாட்டில் சான்றோர்
குறிஞ்சிப்பாட்டில் சான்றோர் என்ற சொல் அறிவுடையோர் என்ற பொருளையேக் குறிக்கிறது.
“இகன் மீக் கடவு மிருபெரு வேந்தர்
வினையிடை நின்ற சான்றோர் போல
இருபே ரச்சமோ டியானும் ஆற்றலேன்“ (குறிஞ்.8)
பகைமையை மேற்கொண்டு செலுத்துகின்ற இரண்டு பேரரசர்களுக்கு அவரைக் கூட்டுந்தொழிலை
மேற்கொண்டு இடைநின்ற அறிவுடையோர் போல உனக்கும் இவள் நோய்க்கும் அஞ்சும் இரண்டாகிய பெரிய அச்சத்தோடே யானும் வருந்துகின்றேன் என தோழி
உரைப்பதாக பொருள் அமைகிறது.
ஈண்டு சான்றோர் என்ற சொல்லிற்கு அனைவரும் அறிந்த “அறிவுடையோர்” என்ற பொருளே அமைகிறது.
·
சான்றோர் என்ற சொல் ஆண்பால், பெண்பால் இருவருக்கும்
பொருந்தும். ஆனால் இவ்விலக்கியங்களில் ஆண்மகனை மட்டுமே குறிக்கின்றன.
·
சான்றோர் என்ற சொல் 12 இடங்களில் அமைகின்றன.
·
சான்றாள் என்ற சொல் ஒரு இடத்தில் அமைகிறது சான்றோன் என்ற சொல்லும் சங்க அக இலக்கியத்தில்
ஒரு இடத்தில் மட்டும் அமைகிறது. சான்றோய் என்ற
சொல்லும் ஒரு இடத்தில் மட்டும் அமைகிறது.
·
சான்றாள் என்ற சொல் பெண்ணொருத்தி அழகுடன் இருப்பவளைக் குறிக்கவும் அவ்வழகு தனக்குக்கிட்டாதவிடத்து
அழகால் வருத்துபவளைக் குறிக்கவும் பயன்படுகிறது. அறிவு சார்ந்த தளத்தில் ஆண்மகன் ஒருவனுக்குச் சான்றோன்(ர்) என்று கூற அழகு சார்ந்த இடத்தில் பெண்ணுக்குச் சான்றோள் என
சங்க இலக்கியத்துள் இருப்பது கருத்தக்கது.
·
கம்பராமாயணத்தில் வரும் சான்றாள் என்ற சொல் சால்புடையவள் என்ற பொருளையேக் குறிக்கின்றது.
·
சான்றோய் (நற்றிணை.365-9) என்ற சொல்லும்
தலைவனையேக் குறிக்கின்றது.
·
சான்றோர் என்ற சொல் பெரும்பாலான இடங்களில் (சான்றோன் மற்றும் சான்றோய் உட்பட ஏழு இடங்களில்) தலைவி விரும்பும் தலைவனையேக் குறிக்கிறது. மற்ற (ஏழு) இடங்களில், பெரியோர், நடுவுநிலைமை உடையவர், தலைவிக்கு உதவி செய்பவர் (மேகம்), அனைத்தும் அறிந்தவர் (இகழ்ச்சிக்
குறிப்பில் ஒன்றுமறியாதவரைச் சுட்டுதல்), அறிவுடையோர், மெய்யுணர்வாளர் என்று தற்காலத்தில் கையாளப்படும் பொருளிலேயே அமைகின்றன. ஒரு இடத்தில் சான்றோர் செல்வம் என்பதற்கு தரும் விளக்கத்தினைக் கூறும் வகையில்
அமைகிறது.
கட்டுரையில் சான்றோர், சான்றாள், சான்றோன், சான்றோய் என்ற சொற்கள் எடுத்தாளப்பட்டுள்ள சங்க இலக்கியங்கள் குறித்த அட்டவணை:(15)
சான்றோர்
(12)
|
சான்றாள்
(1)
|
சான்றோன்(1)
|
சான்றோய்(1)
|
நற்றிணை
(327:1,327:4,233,220,210), குறுந்தொகை (265,252,102),
அகநானூறு(112,55),
மதுரைக்காஞ்சி(764-765), குறிஞ்சிப்பாட்டு(28)
|
கலித்தொகை–
முல்லைக்கலி
109.21-22
|
நற்றிணை
(238)
|
நற்றிணை
(365)
|
கட்டுரையில் சான்றோர், சான்றாள், சால் என்ற சொல் எடுத்தாளப்பட்டுள்ள பிற இடங்கள் குறித்த அட்டவணை:(4)
சான்றோர்(2)
|
சான்றாள்(1)
|
சால்(1)
|
தொல்காப்பியம் –பொருளதிகாரம் (புறத்திணையியல் (75), கற்பியல்(144))
|
கம்பராமாயணம் சுந்தரகாண்டம் திருவடிதொழுத படலம் (1062)
|
தொல்காப்பியம்
-பொருளதிகாரம் (1010-12)
|
துணைநூற்பட்டியல்
1. நற்றிணை, பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் உரை, கழக வெளியீடு, பதிப்பு 2007.
2. குறுந்தொகை, உ.வே.சா உரை, டாக்டர் உ.வே.சா நூல்நிலைய வெளியீடு, பதிப்பு 2009.
3. அகநானூறு, ந.மு. வேங்கடசாமி நாட்டார் உரை, கழக வெளியீடு, பதிப்பு 2008.
4. கலித்தொகை, நச்சினார்க்கினியர் உரை, பதிப்பு 1887.
5. மதுரைக்காஞ்சி, குறிஞ்சிப்பாட்டு, பெருமழைப்புலவர் பொ.வே. சோமசுந்தரனார் உரை, கழக வெளியீடு, பதிப்பு 1962.
6. புதிய பனுவல், பன்னாட்டுத் தமிழியல் ஆய்விதழ் இணையவழி ஆய்விதழ், காலாண்டிதழ், நவம்பர்2008.
7. தொல்காப்பியச் சிறப்பகராதி, தொகு. ப.வே. நாகராசன், த. விஷ்ணுகுமாரன்)
பன்னாட்டுத் திராவிட மொழியியல் நிறுவனம் திருவனந்தபுரம் 2000.
8. தமிழ்ப்பேரகாரதி, சென்னைப் பல்கலைக்கழகம், பாகம்.3, 1982.
Comments
Post a Comment